ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் – வைத்தியர் பாலகோபி

123 0

ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் என  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளரும் சிறுநீரக தொகுதி அறுவை சிகிச்சை நிபுணருமான பா.பாலகோபி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டின் போது உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இன்று (6)குழந்தையின்மைப் பிரச்சினை தீவிரம் பெற்றுள்ளது. குழந்தையின்மைக்கான மருத்துவத் தேவைப்பாடுடையவர்களாக 50 வீதம் பெண்களும் 50 வீதம் ஆண்களும் காணப்படுகின்றனர்.

ஆனால், சமூகத்தில் பெண்களை மட்டுமே குறைகூறுகின்றோம். பெண்களை மட்டுமே மருத்துவத் தேவைப்பாடுடையவர்களாகப் பார்க்கின்றோம். இந்த நிலைமை மாற்றம் பெறவேண்டும்.

 

குழந்தையின்மைப் பிரச்சினைக்காக ஆண்கள் உண்மையில் சிறுநீரக சனனித் தொகுதி மருத்துவரைத்தான் நாட வேண்டும்.

ஆனால், இது தொடர்பான போதிய அறிவு விழிப்புணர்வு எவரிட மும் இல்லை. அத்துடன், இந்தத் துறை உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடை யாத துறையாகவே இருக்கின்றது. இந்ததுறையை விருத்தி செய்ய வேண்டியது காலத்தினுடைய கட்டாயமாகக் காணப்படுகின்றது.

 

ஆண்களினுடைய விந்து உருவாக்கத் திலிருந்து விந்து கடத்தப்படுகின்ற பாதையிலிருந்து கருத்தங்காமை பிரச்சினை ஏற்படுகின்றது.

முட்டையைத் தேடி மில்லியன் கணக்கான விந்தணுக்கள் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. விந்தணுக்களின் எண்ணிக்கைகள் குறைகின்றபொழுது பிரச்சினை ஏற்படுகின்றது. வால்களற்ற விந்துக்களால் முன்னோக்கிச் செல்ல முடியாது. இவற்றாலும் கருக்கட்டலில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உடல் வெப்பநிலை கூடுகின்றபொழுது அல்லது சுற்றாடல் வெப்பநிலை கூடு கின்றபொழுது அல்லது எம்மிடம் இருக்கின்ற புகைத்தல், மது உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்களாலும் இந்த விந்தணுக்களின் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

இன்று எமது இளைஞர்கள் நீண்ட நேரம் வேலை செய்கின்றார்கள். பலர்  சாரதிகளாகப் பணிபுரிகின்றார்கள். பத்து மணித்தியாலங்கள் தொடர்ந்து அந்த இருக்கையில் இருக்கின்ற பொழுது விந்துகள் இறந்து விடுகின்றன. எனவே இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தி போதிய மருத்துவ அறிவுறுத்தல்களை பின் பற்றவேண்டும்.

விந்துக்களையும் முட்டைகளையும் சேர்க்கின்ற பொறிமுறை தனியார் மருத்துவமனைகளில் மாத்திரமே காணப்படுகிறது.

அரச மருத்துவமனைகளில் இல்லை. இதனால் ஏழைக்குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. ஆதலால், தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் அத்தனை வசதி வாய்ப்புக்களும் அரச மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்படவேண்டும்.

எமது சமுதாயத்துக்காக எம் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக நாம் அர்ப்பணிப்பானதும் ஆக்கபூர்வமான துமான பல திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, மருத்துவ பீட பீடாதிபதி ரா.சுரேந்திரகுமாரன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வைத்தியர் பா. பாலகோபி வைத்தியர் சி.இரகுராமன் இருவரும் இணைந்து  “குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்” என்ற நூலை எழுதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.