கட்டண திருத்தத்தின் பின் புகையிரத திணைக்களத்திற்கு மாதாந்தம் ஒரு பில்லியன் ரூபா இலாபம்

163 0

புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதையடுத்து புகையிரத திணைக்களம் மாதாந்தம் ஒரு பில்லியன் இலாபமீட்டுகின்றது. எனினும் இந்த இலாபம் எரிபொருள் கொள்வனவிற்கான செலவை மாத்திரமே ஈடுசெய்கிறது.

மாறாக சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு என்பவற்றுக்கான 9.6 பில்லியனை இதன் மூலம் ஈடுசெய்ய முடியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (6) செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கை புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது. புகையிரத பொறியியலாளர்கள் , கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களுடன் புகையிரத சேவையை பொது போக்குவரத்தாக நஷ்டம் ஏற்படாத வகையில் எவ்வாறு நிர்வகித்துச் செல்வது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திணைக்களத்தினால் தீர்மானங்களை எடுப்பதில் காணப்படும் சிக்கலால் , பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. எனவே புகையிரத அதிகாரசபையை உருவாக்கி , அதன் ஊடாக புகையிரத சேவைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் புகையிரத திணைக்களம் வருடாந்தம் 10 பில்லியன் நஷ்டமடைந்துள்ளது. இவ்வருடத்தில் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றத்துடன் , அதற்கான செலவைகக் கூட நிர்வகிக்க முடியாத நிலைமை புகையிரத திணைக்களத்திற்கு காணப்பட்டது. இதன் காரணமாக மாதாந்தம் 300 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது. எனினும் வருமானம் 300 – 500 மில்லியன்களாகவே காணப்பட்டது.

இதனைக் கருத்திற் கொண்டு புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதையடுத்து , இலங்கை வரலாற்றில் முதன்முறையாக புகையிரத திணைக்களம் மாதத்திற்கு ஒரு பில்லியனுக்கும் அதிக இலாபத்தைப் பெறுகின்றது. எவ்வாறிருப்பினும் இந்த இலாபம் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான செலவிற்காக மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது.

சம்பளத்திற்காக செலவாகும் 7 பில்லியன் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவிற்காக வழங்கப்படும் 2.6 பில்லியன் என்பவற்றையும் ஈடு செய்வதற்கான வருமானத்தை புகையிரத திணைக்களம் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே தான் சிறந்த முகாமைத்துவ முறைமைகளைப் பயன்படுத்தி இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.