2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ள புதிய பொருளாதார முறைமை

110 0

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாடிதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தேவைப்படுவது வெளிநாட்டு அந்நியச்செலாவணியே என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு நேற்று (05) கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

கொந்தளிப்பில் இருந்து வாய்ப்புக்கு மீள்வது’ என்ற தொனிப்பொருளின் இந்த மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதுடன், மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, இதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் மின் சக்தித் துறைக்கு மாத்திரம் 300 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்படவுள்ளதாகவும் இதனால் இச்செலவை மீளப் பெற்றக்கொள்வதற்கான மாற்றுவழிகளைத் தேட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வலுச்சக்தி துறையில் புதிய மாற்று சக்திகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, புதுப்பிக்கத்தக்க சக்திக்கு பதிலாக பசுமை ஹைட்ரஜன் சக்தியில் கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser), இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விஷ் கோவிந்தசாமி, இந்திய என்.ஐ.டி.ஐ யின் பிரதம நிறைவேற்ற அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ன, ஹர்ஷ டி சில்வா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.