இலங்கையின் கடன் சுமைக்கு தீர்வை காண்பதற்கான கூட்டு முயற்சிகளிற்கு சீனா அழைப்பு

127 0

இலங்கையின் கடன்சுமைக்கு தீர்வை காண்பதற்கான கூட்டு முயற்சிகளிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை போன்ற நாடுகளின் கடன்தறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக  சர்வதேச நாணயநிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனும் ஏனைய நிதியமைப்புகளுடனும் சீனாவிற்கு நீண்ட கால நல்லுறவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடிகள் சவால்களிற்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிதியமைப்புகளிற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன் சுமையை குறைத்து பேண்தகு அபிவிருத்தியை சாத்தியமாக்குவதற்கும் உரிய சர்வதேச நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து செயற்படும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.