அரபுக் கல்லூரியின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

85 0

வக்பு சட்டத்தின் கீழ் இருக்கும் கபூரிய்யா அரபுக் கல்லூரியின் சொத்துக்களை ஆக்கிரமிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அதனால் வக்பு சட்டத்தின் கீழ் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்க நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நம்பிக்கையாளர் சட்டம் தொடர்பாகவும் வக்பு சட்டம் தொடர்பாகவும் முஸ்லிம் சமூகத்துக்குள் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி தொடர்பாகவும் அதன் வக்பு சட்டம் தொடர்பாகவும் பாரியதொரு கலந்துரையாடல் முஸ்லிம் சமூகத்தில் இடம்பெற்று வருகின்றது. கபூரிய்ய அரபு கல்லூரி அன்று இருந்த முஸ்லிம் தலைவர்களால் முஸ்லிம் சமூகத்துக்காக பொதுச் சொத்தாக பெயரிடப்பட்டிருக்கும், வக்பு சட்டத்தின் கீழ் இருக்கும் சொத்தாகும்.

ஆனால் கபூரிய்யா அரபுக்கல்லூரியின் சொத்தை, அதனை முஸ்லிம் சமூகத்துக்காக நன்கொடையாக வழங்கிய குடும்பத்தின் ஒருவர் அந்த சொத்தை மீண்டும் தனது அதிகாரத்துக்கி கீழ் பெற்றுக்கொண்டு, வக்பு சட்டத்துக்கு அப்பால் சென்று செயற்படுகின்றார்.

அத்துடன் கபூரிய்யா கல்லூரிக்கு சொந்தமான நிறுவனங்களை சொப்ட் லாெஜிக் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, தங்களுக்கு நினைத்த பிரகாரம் செயற்படும் நிலைமை இருந்து வருகின்றது. அதனால் முஸ்லிம் தலைவர்களால் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள, வக்பு சட்டத்தின் கீழ் இருக்கும் சொத்துக்களை பாதுகாத்து வழங்குமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.