உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை நடாத்திய உலக தாய் மொழி தினம் கிளிநொச்சியில் வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை நடாத்திய உலக தாய்மொழி தின நிகழ்வுகள் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஆரம்பமாகி கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி பிறேமா மதுரநாயகம் தலைமையில் நடைபெற்றுள்ளன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சி.சிறீசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேல், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஜேர்மனி கிளையின் தலைவர் இ.இராஜசூரியர், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் ஊடக இணைப்பாளரும் தினகரன் பிரதம ஆசிரியருமான ரீ.செந்தில்வேல், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் இணைப்பாளர் பீ.பிறேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தமது விருந்தினர் உரைகளையும் ஆற்றியிருந்தனர்.
மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அருணாசலம் சத்தியானந்தம் அவர்கள் மேற்படி நிகழ்வுகளை மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திகழ்வில் உலகத்து மொழிகள் அவற்றின் வளர்ச்சி, தொன்மம், சிறப்பு அவற்றினுள் தமிழ் மொழி பெற்றுள்ள இடம் தமிழ் மொழியின் சிறப்புக்கள், தமிழர்களாய் உள்ளவர்களது பெருமைகள் தமிழ் மொழியின் வளரச்சி, தமிழ்மொழிப் பற்று போன்ற விடயங்கள் உள்ளடங்கலாக நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களால் உரைகள் சிறப்பாக நிகழ்த்தப்பட்டிருந்தன.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினால் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, விவாதப்போட்டி என்பனவற்றில் வெற்றியீட்டிய மாணவர்கள் விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.