சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் நெருப்பின்குரல் விருது – 2022 போட்டியானது கடந்த 26.10.2022 புதன்கிழமை தொடக்கம் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை வரை சொலத்தூண் மாநிலத்தில் நடைபெற்றது.
நீண்டகாலமாக சுவிஸ் நாட்டில் இசைத்துறையினை முன்னெடுத்துவரும் இசை ஆசிரியர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்த இப்போட்டியில் பாலர் பிரிவு, ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, என வகைப்படுத்தப்பட்ட போட்டிப்பிரிவுகளில் தனிப்பாடல், குழுப்பாடல் போட்டிகளிற்கும், இசைக்குயில் விருது, இணை எழுச்சிப்பாடல், நெருப்பின் குரல் ஆகிய போட்டிகளிலும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் தங்களின் மிகச்சிறந்த ஆளுமையினை வெளிப்படுத்தியிருந்தார்கள். போட்டி நடுவர்களாக தாயக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து முதுநிலை இசை ஆசிரியர்கள் கடமையாற்றியிருந்தார்கள்.
அணிசெய் இசைக்கலைஞர்களாக கலந்துகொண்ட தாயக இந்திய ஐரோப்பிய கலைஞர்கள் தங்கள் பங்களிப்பினை மிகச் சிறப்பாக வழங்கியிருந்தார்கள்.குறிப்பாக அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில்; ஆற்றுகைத் தேர்வினை நிறைவுசெய்திருந்த பல இளம் இசைக்;கலைஞர்கள் அணிசெய் கலைஞர்களாக பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்புக்களுடன் மண்டபம் நிறைந்த இசை ரசிகப்பெருமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இசைக்குயில் – 2022 ஆம் ஆண்டுக்கான விருதுப்போட்டியில் மாணவர்களின் இசைத்துறை வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றிவரும் சங்கீதாலய நிறுவன இயக்குனரும் புகழ்பெற்ற இசை ஆசிரியருமான இசைக்கலைமணி திரு. ஆறுமுகம் செகசோதி அவர்களின் மாணவன் செல்வன் ஹரீஷ் சிறீதரன் அவர்கள் தனது அதி உச்ச திறமையினை வெளிப்படுத்தி 2022 ஆம் ஆண்டுக்கான இசைக்குயில் என்னும் அதி உயர் மகுட விருதினையும் இவ் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தங்க நாணயப் பரிசினையும் தட்டிச்சென்றார்.
சுவிஸ் நாட்டில் நீண்டகாலமாக நடாத்தபட்டுவரும் இசைக்குயில் போட்டி வரலாற்றில் இசைக்குயில் விருதினை ஆண் மகன் ஒருவர் பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
தமிழீழ விடுதலைப்போராட்ட உணர்வுகளை, வலிகளை எடுத்துச்செல்லும் குழுநிலை எழுச்சிப்பாடல்களிற்காக வழங்கப்படும் நெருப்பின் குரல் விருதினை காத்திரமான எழுச்சிப் பாடல்களின் ஊடாக அதி உச்ச எழுச்சியினை வெளிப்படுத்திய லுவுசான் தமிழர் இல்ல ஆசிரியர் திருமதி நகுலா பாலசங்கர் அவர்களின் மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தொடர்ச்சியாக பல வருடங்களாக இவ் விருதினை லவுசான் தமிழர் இல்ல ஆசிரியர் திருமதி. நகுலா பாலசங்கர் அவர்களின் மாணவர்களே பெற்றுவருகிறார்கள்.
போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களிற்கும், வெற்றிபெற்ற மாணவர்களிற்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது. அத்துடன் தங்கள் பிள்ளைகளிற்கு தமிழ்மொழியினையும் தமிழ்க்கலையினையும் முன்னெடுத்துச்செல்வதற்கு எப்பொழுதும் பக்கபலமாக இருக்கின்ற பெற்றோருக்கும் நிறுவகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
தமிழர்களின் பாரம்பரியத்தினை, இன அடையாளத்தினை, வாழ்வு உரிமைகளை நெறிப்படுத்தக்கூடிய தமிழ்க்கலையினை புலம்பெயர்வாழ் எம் குழந்தைகளிற்கு மிகச்சிறப்பாக முன்னெடுத்துச்சென்ற தமிழ்க்கலை ஆசிரியர்களின் பணி போற்றுதற்குரியது.
குறிப்பிட்ட கால இடவெளிக்குள் மாணவர்களை போட்டிக்கு தயார்ப்படுத்தி மிகச்சிறப்பாக பங்குபற்றச்செய்த இசை ஆசிரியர்கள் அனைவருக்கும் நிறுவகத்தின் சார்பாக நன்றியினை தெரிவிப்பதுடன் கலை ஆசிரியர்களின் கலைப்பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த ஜந்து நாட்களாக நடைபெற்ற இப் போட்டிகளின் போது இளம் தலைமுறையினரும் தேசிய செயற்பாட்டாளர்களும் தங்களுடைய எல்லைகளிற்கு மேற்பட்ட உதவிகளை வழங்கியிருந்தார்கள்.
அலுவலக தொழில்நுட்ப ஒழுங்கமைப்பு பணிகளை மிகச்சிறப்பாக நெறிப்படுத்திய வளர்ந்து வரும் இளைய மாணவ சமூகத்தினர் அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
நிகழ்வுகள் சிறப்புற நடைபெற காலநேரம் பாராது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
இந் நிகழ்வினூடாக மீதப்படுத்தப்படும் முழுமையான நிதியும் கடந்த காலங்களைப்போல போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களின் மறுவாழ்வு தேவைகளிற்கும், கட்டாய உதவிகள் தேவைப்படும் மாணவர்களின் கல்வி உதவி செயல் திட்டத்திற்கும் பயன்படவிருக்கின்றது.
நன்றி.
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
01.11.2022