நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படமாட்டாது என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சமுர்த்தி மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வரும் நிலையிலேயே அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சமுர்த்தி நலன்புரி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஐக்கியம், இறையான்மை என்பவற்றை மாற்றுவதற்கு ஒருபோதும் நாங்கள் தயாரில்லை. அதேபோன்று ஜனாதிபதி முறைமையையும் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கமாட்டோம்.
நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பில் மட்டும் மாற்றக்கூடிய பிரிவுகளுக்கான திருத்தங்களைக் கொண்டுவர மாட்டேன் என்றும், நாட்டின் இறையான்மை, ஐக்கியம் என்பவற்றைப் பாதுகாக்கக்கூடிய திருத்தங்களுக்கு மாறாக அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு திருத்தத்திலும் கைவைக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருக்கின்றார். மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாகும் விடயத்திற்கோ மற்றும் சமஸ்டி அரசியலமைப்பு உருவாகும் விடயத்திற்கோ கைவைக்கப்போவதில்லை என்றும் கூறியிக்கின்றார்.
புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் விடயம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது. அவர்களுக்கும் இந்த நாட்டு மக்கள் ஆணையை வழங்கியிருக்கின்றனர். அதேபோல எங்களுக்கும் மக்கள் ஆணை கிடைத்துள்ளது. எனவே அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்கு முழுமையான அரசியலமைப்பொன்றுக்குச் செல்ல வாய்ப்புக்கள் இல்லை என்று கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நினைக்கின்றோம். அதேபோல போர்க் குற்ற விவகாரங்களை விசாரணை செய்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளக விசாரணையில் அமர்த்துவது குறித்து தற்போது பல்வேறு தரப்பினரால் பேசப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் பிழையாகும். இந்த நாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் வாக்குறுதி அளித்திருக்கவில்லை. அதேபோல வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் இந்த நாட்டில் போர்க் குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இடமளிக்காது” எனத் தெரிவித்தார்.