சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு விருந்து வழங்கிய சந்திரிக்கா

104 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு இராபோசன விருந்தை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த இராபோசன விருந்தின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி எதிரணி தரப்பில் விரிவான கூட்டணியை உருவாக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது நாடு முழுவதும் பிரதான எதிர்க்கட்சியாக நிறுவப்பட்டுள்தால், அந்த கட்சியுடன் இணைந்து விரிவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது சந்திரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.

இதனடிப்படையில் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தும திகதி உள்ளிட்ட விடயங்களை அதன் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி துரிதமாக தீர்மானிக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை உருவாக்கப்படும் இந்த விரிவான கூட்டணியில் அவருக்கான பொறுப்பு தொடர்பாகவும் முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

உருவாக்கப்பட உள்ள கூட்டணியின் ஆலோசகராக செயற்படுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தானே எதிர் தரப்பில் இருக்கும் அனுபவமுள்ள ஒரே முன்னாள் ஜனாதிபதி என்பதே இதற்கு காரணம் எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.எனினும் இது பற்றி எதிர்காலத்தில் சிந்திக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.