பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அலுவலகத்தில், வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செய்திருக்கிறார். தொடர்ந்து புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட பழனிச்சாமி, உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர ஊர்தி வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு, ‘அம்மா இருசக்கர வாகனம் திட்டம்’ எனப் பெயரிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8 கோடி மக்களை ஆட்சி செய்யும் அரசு அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். அவ்வாறு செயல்படுவதற்கு பதிலாக, மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்துக்களை குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரை முன்னிறுத்தி, அவரது பாதையில் அரசு செயல்படும் என்று அறிவிப்பதோ, அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதோ ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, ஆட்சி அதிகாரத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும். ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில்தான் ஆட்சி செய்ய வேண்டும். அதை விடுத்து ஜெயலலிதா காட்டும் பாதையில் செயல்படப் போவதாக கூறுவது ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது அல்லவா?
ஊழல் வழக்கில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகும் ஜெயலலிதா தான் தமிழகத்தின் வழிகாட்டி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஒருபுறம் இக்குற்றத்தை இழைக்கும் ஆட்சியாளர்கள், இன்னொருபுறம் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா கட்டளைக்கு பணிந்து செயல்படுகின்றனர். இத்தகைய சட்ட மீறல்கள் தொடர்வதை இனியும் அனுமதிக்கக்கூடாது. எனவே, ஊழல் குற்றவாளியின் பெயரில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்டத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசின் பெயரில் செயல்படுத்தப்பட வேண்டும்.
கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட வேண்டும். திரையரங்குகளில் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் குறித்த செய்தித் தொகுப்பு ஒளிபரப்பப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழக முதல்வரை ஆளுனர் அழைத்து, ஊழல் குற்றவாளியின் பெயரில் ஆட்சி நடத்துவதை விடுத்து, அரசியல் சட்டத்தின் பெயரால் ஆட்சி நடத்தும்படி அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட மறுத்தால் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.