உக்ரைன் மீதான ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்கத் தயார்

96 0

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியை ரஷ்ய அதிபர் புதின் உண்மையிலேயே தேடுகிறார் என்றால், அவரை சந்திக்கத் தயார்” என குறிப்பிட்டார். ஆனால், புதின் அவ்வாறு தேடவில்லை என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், பிரான்ஸும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய இம்மானுவேல் மேக்ரன், ரஷ்யாவுடன் சமரசமாக செல்லுமாறு உக்ரைனை நாங்கள் வற்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்தார். அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் மேக்ரன் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இத்தாலி வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி, “உக்ரைனில் அமைதி நிலவுவதற்கான நேரம் வந்துவிட்டது. எனினும், உக்ரைனின் சுதந்திரம் மிகவும் முக்கியம். ரஷ்யாவிடம் அடிபணிவதன் மூலம் அமைதி ஏற்பட இத்தாலி விரும்பவில்லை. உக்ரைன் மீது குண்டுகளை வீசுவதற்குப் பதிலாக, அமைதிக்கான உறுதியான சமிக்ஞையை ரஷ்யா வெளிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.