பதிவுத் துறை சார்ந்து தொழில் புரிந்துவரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்காக ஆவண எழுத்தர்கள் நல நிதியத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களைச் சார்ந்து தொழில் புரிந்துவரும் ஆவண எழுத்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஆவண எழுத்தர்கள் நல நிதியம் உருவாக்கப்படும் என்று கடந்த 2007-08-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, 2010-ல் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் இந்த நல நிதியத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, 2021-22-ம் நிதியாண்டுக்கான பதிவுத் துறை மானியக் கோரிக்கையில், ஆவணஎழுத்தர்கள் நல நிதியம் முழுவதுமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, உதவித்தொகை குறைவாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போதுள்ள பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில், நிதியத்தை நடைமுறைப்படுத்த, சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியச் சட்டம் இயற்றப்பட்டது.