இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க் கப்பல்கள் திடீர் ஒத்திகை

268 0

சீனா நாட்டின் கடற்படையை சேர்ந்த போர்க் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று(21) திடீர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

உலகின் அதிகமான மக்கள் தொகையை கொண்ட பெரிய நாடாக அறியப்படும் சீனா, ஆயுத பலத்திலும் இந்தியாவை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராணுவத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், இந்திய பெருங்கடல் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தின்கீழ் அடக்கியாள்வதிலும் முனைப்புகாட்டிவரும் சீனா, தங்கள் உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி, இந்திய பெருங்கடல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் கடமை எங்களுக்கு உண்டு என்று சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்த அடாவடியை செயல்முறையில் நிரூபிக்கும் விதமாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கடற்படையை சேர்ந்த போர்க் கப்பல்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகம் பகுதிக்கும், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனா நாட்டின் கடற்படையை சேர்ந்த போர்க் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று திடீர் ஒத்திகையில் ஈடுபட்டதாக அந்நாட்டின் பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ‘கொல்லைப்புறம்’ என கருதப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் முன்னறிவிப்பின்றி சீனா நடத்தியுள்ள இந்தப் போர் ஒத்திகை தெற்காசிய தீபகற்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.