சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்ஆர்எஸ் மைனிங், குட்கா உற்பத்தியாளர்கள் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த ரூ.342.82 கோடி வருமானத்துக்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முறையாக வரி செலுத்தவில்லை என உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.206.42 கோடிவருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி, அவருக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலங்கள் மற்றும் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர்.
இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இதுதொடர்பாக வருமான வரித் துறை வரி வசூல் அதிகாரியான குமார் தீபக் ராஜ் சார்பில், வழக்கறிஞர் ஏ.பி.ஸ்ரீனிவாஸ் உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில் கூடுதல்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விஜயபாஸ்கரின் குவாரியில் 2011-19 காலகட்டத்தில் ரூ.66.50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த குவாரியில் இருந்து ரூ.122.58கோடி வருமானம் கிடைத்துள்ளது. சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.85.46கோடி பெறப்பட்டுள்ளது. பான் மசாலா, குட்கா உற்பத்தியாளர்களிடம் இருந்து ரூ.2.40 கோடி பெறப்பட்டுள்ளது.
பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட கூவத்தூர்ரிசார்ட்டுக்கு விஜயபாஸ்கர் ரூ.31 லட்சம் செலவழித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, விஜயபாஸ்கரின் ஆதரவாளரான நயினார் முகமதுவீட்டில் ரூ.2.95 கோடியும், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ.15.46 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டன. விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், அவர் ரூ.342.82 கோடிக்கு முறையாக வரிசெலுத்தாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த வருமான வரி ரூ.206.42 கோடி பாக்கிக்காகவே, சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை டிச.12-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.