பாதுகாப்பு நலன் கருதி பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது கூட்டாளிகளின் ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்துள்ளது.
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத்-உத்-தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறான். இவ்வியக்கமும் தடைவிதிக்கப்பட்ட இயக்கமாக ஐ.நா., அமெரிக்கா அறிவித்து உள்ளது.
இந்திய தரப்பில் பல்வேறு முறை வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான், அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த டொனால்டு டிரம்ப்பின் நடவடிக்கையினால் ஆட்டம் கண்டது. இந்தியாவில் இருந்து மேலும் நெருக்கடி எழும், அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாக வேண்டும் என்றநிலையில் ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த மாதம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அத்துடன் அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஹபீஸ் சயீத் மீதான பிடி மேலும் இறுகி உள்ளது. அவன் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் ஒப்புக்கொள்கிற வகையில், அவனது பெயர் பயங்கரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. அவருடன் அவனது நெருங்கிய கூட்டாளிகளான காஜி காசிப், பைசாலாபாத்தை சேர்ந்த அப்துல்லா ஒபைது, முரித்கேயை சேர்ந்த ஜாபர் இக்பால், அப்துர் ரகுமான் ஆகிய நால்வரது பெயர்களும் பயங்கரவாத தடை சட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டன. பஞ்சாப் மாகாண அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தீவிரவாத தடுப்பு துறைக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இப்போது தீவிரவாதி ஹபீஸ் சயீத் ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்து உள்ளது. பாதுகாப்பு நலன் கருதி பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது கூட்டாளிகளின் 44 ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து உள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.