காலி முன்னாள் பெண் நீதிவானுக்கு கடூழியச் சிறைத் தண்டனை விதிப்பு

109 0

காலி முன்னாள் பெண் நீதிவான் டி.எஸ். மெரிங்சி ஆரச்சிக்கு  10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ( 2) தீர்ப்பளித்தது.

கலால் வரி குற்றங்கள் தொடர்பில் அறவிடப்படும்  அபராதத் தொகையை குறைத்து பதிவு செய்ததன் ஊடாக  பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ்  குற்றமிழைத்ததாக தாக்கல் செய்யப்பட்டிருந்த இரு வழக்குகளில் அவரை குற்றவாளியாக கண்டே, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்தது.

நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்டிருந்த இவ்விரு வழக்குகளையும்,  குற்றவாளியான  காலி முன்னாள் நீதிவான் இல்லாமலேயே குற்றவியல் சட்டத்தின் 241 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம்  விசாரணை செய்து,  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி ஒவ்வொரு வழக்கு தொடர்பிலும் தலா 5 வருடங்கள் வீதம் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக,  22 ஆயிரத்து 500 ரூபா  தண்டப் பணம் செலுத்தவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறினால், மேலதிக சிறைத் தண்டனை விதிக்கப்படும் என  நீதிபதி எச்சரித்தார்.

எவ்வாறாயினும் தன்டணை அறிவிக்கப்பட்ட பின்னர், மன்றில் ஆஜராகியிருந்த சி.ஐ.டி. அதிகாரிகள்  குற்றவாளியான முன்னாள் நீதிவான் நாட்டில் இல்லை எனவும் அவர் வெளிநாடொன்றில் இருப்பதாகவும் அறிவித்தனர்.

இதனையடுத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய நீதிபதி அமல் ரணராஜா திறந்த பிடியாணை பிறப்பித்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதிகளில் கலால் வரி தொடர்பிலான வழக்கொன்றில் விதிக்கப்பட்ட 7500 ரூபா தண்டப் பணத் தொகையை 1500 ரூபா என பதிவு செய்தமை மற்றும் அதனை ஒத்த பிறிதொரு வழக்கில்  விதிக்கப்பட்ட 5000 ரூபா தண்டப்பணத்தை 1500 ரூபா என  குறைத்து பதிவு செய்துகொண்டமை ஊடாக பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக கூறி இவ்விரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கடந்த 2009 ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் இது குறித்த குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்த நிலையில், நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இன்று இந்த தீர்ப்பறிவிக்கப்பட்டது.