பாராளுமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது அரச தரப்பா எதிர்கட்சியினரா என்பது தொடர்பில் இரு தரப்புக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி மீது சபாநாயகர் குற்றம் சாட்டினார். அத்துடன் தேவையில்லா விடயங்களை பேசுவதை தவித்துக்கொள்ளுமாறும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றம் இன்று (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதனையடுத்தது இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பு, தினப்பணிகளைத் தொடர்ந்து சுயாதீன எதிர்க்கட்சி .எம்.பி அத்துரலிய ரத்தன தேரரினால் நிலையில் கட்டளை 27 இன் 2கீழ் விசேட கூற்று முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து எழுந்த அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வரவு செலவுத்திட்ட விவாதத்திற்கு நேரம் போதாது என்பதனாலேயே பாராளுமன்றத்தை இரவு 7 மணிவரை கூட்ட வேண்டியேற்பட்டது.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் ஊடக பிரசாரங்களுக்காக ஏதோவொரு விசேட கூற்றை முன்வைப்பதனால் அது தொடர்பான பதிலுக்கும் பின்னர் விவாதத்தில் பேசும் எம்.பி. க்கள் விவாதத்தை தவிர்த்து குறித்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நேரத்தை எடுப்பதனால் அமைச்சுக்கள் மீது பேசுவதற்கு எம்.பி.க்களுக்கு நேரம் போதாதுள்ளது.ஒரு எம்.பி.க்கு 6,7 நிமிடங்களே வழங்கப்படும் நிலையில் எதிர்க்கட்சியினர் அந்த நேரத்தை வீணடித்து விடுகின்றனர்.
அதனால் காலை நேரத்தில் இவ்வாறு நேரத்தை ஆளும் தரப்பினர் வீணடித்தால் அவர்களின் தரப்பில் இருந்து, விவாதத்துகுரிய நேரம் கழிக்கப்படவேண்டும். எதிர்க்கட்சி அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்களின் நேரத்தில் இருந்து நேரம் கழிக்கப்படவேண்டும். ஏனெனில் விவாதத்துக்கு ஆளும் கட்சிக்கு 257 நிமிடங்களும் எதிர்க்கட்சிக்கு 314 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமன்றி இரவு 7 மணியையும் தாண்டி விவாதம் நீடிப்பதனால் பாராளுமன்ற ஊழியர்களும் வீடு செல்ல முடியாது காத்திருக்க வேண்டியுள்ளது.அத்துடன் போக்குவரத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் சபாநாயகர் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., அவ்வாறான நேர வீணடிப்புக்கள், தாமதங்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கே உண்டு. எனவே அவர் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும். எமது தரப்பினர் பொறுப்புடன்தான் செயற்படுகின்றனர் என்றார்.
இதனையடுத்து அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.க்குமிடையில் யார் நேரத்தை வீணடிப்பது என்பது தொடர்பில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது தலையிட்ட சபாநாயகர், இந்த விடயத்தில் இரண்டு அரப்பினரும பொறுப்புடன் செயற்படவேண்டும்.
தேவையில்லாத பேச்சுக்களையே பேசி நேரத்தை வீணடிக்கின்றனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தான் பொறுப்பின்றி ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றனர். அதனால் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.