இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என மக்கள் கருதுவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் சமூகக் குறிகாட்டி அமைப்பு நடத்திய பொருளாதார சீர்திருத்த குறியீடு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை அவசியமான பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவே என அதிகளவான இலங்கையர்கள் நம்புவது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 56.6 வீதமானவர்கள் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 31.4 வீதமானவர்கள் தாங்கள் அவரை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும் நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 45 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். 50 வீதமானவர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மீது 42 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள அதேவேளை சம்பிக்க ரணவக்க மீது 23 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.