வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்: இங்கிலாந்து நிறுவனங்கள் அறிமுகம்

113 0

இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதுகுறித்து “தி கார்டியன்” நாளிதழில் கூறியிருப்பதாவது.

முந்தைய பொருளாதார சூழலில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலைபார்க்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், முதல் கட்டமாக 100 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. சுமார் 2,600 பணியாளர்கள் பயனடையவுள்ள இந்த திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் அவை கையெழுத்திட்டுள்ளன.

தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள 4 நாட்கள் வேலை திட்டத்தால் ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் குறைக்கப்படாது எனவும், முன்பு வழங்கப்பட்ட அதே அளவிலான சம்பளத்தை அவர்கள் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தால் பணியாளர்களின் வேலைத்திறன் மேம்படுவதோடு நாட்டிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என அந்த நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

குறிப்பாக, ஆட்டோம் பேங்க் மற்றும் சர்வதேச மார்கெட்டிங் நிறுவனமான ஏவின் ஆகியவை இங்கிலாந்தில் உள்ள தங்களது 450 பணியாளர்களுக்கு வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் வேலைத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதில் பெரும்பாலானவை தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் போன்ற சேவை துறை நிறுவனங்களாகும். மேலும், உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனங்களும் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.