ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை இந்தியா மீண்டும் தொடர இருப்பதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி, இந்திய தூதரகத்திலிருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவு தடைபட்டது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா வழங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே ராஜதந்திர உறவு மீண்டும் தொடங்கியது.
இந்தச் சூழலில், இந்தியா பாதியில் நிறுத்திய உள்கட்டமைப்புத் திட்டங்களை மீண்டும் தொடரும் என்று ஆப்கான் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் கூறுகையில், “முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அரசியல் மாற்றங்களால் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் அவை மீண்டும் தொடரப்படுகின்றன. இந்தியா 20 கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடர விரும்பம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.