தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மின் பழுது மற்றும் மின்கசிவால் விபத்து ஏற்படும்போது மனித உயிரிழப்புகள் உண்டாகின்றன. இதைத் தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பின்படி, புதிய மின்இணைப்பு பெறுபவர்கள் ‘ஆர்சிடி’என அழைக்கப்படும் ‘ரெசிடுயல் கரன்ட் டிவைஸ்’ என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடையமின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் அதிகரித்துவரும் மின் விபத்துகள் மற்றும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு புதிய மின்நுகர்வோர்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் ஆர்.சி.டியை அவரவர் மின் இணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கடந்த சில மழைக்கால மாதங்களில் பல வகைகளில் மின் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
‘ஆர்சிடி’ உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பில் பொருத்துவதன் மூலம் இத்தகைய விலைமதிப்பற்ற மனித உயிர்கள் இழப்பைத் தவிர்த்திருக்க முடியும். எனவே, வீடு, கடை, தொழில்,பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் மற்றும் தற்போதுள்ள அனைத்து வகையான மின்நுகர்வோர்களும், மனித உயிர்பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ‘ஆர்சிடி’யை அவரவர் மின்இணைப்பில் நிறுவ அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு தமிழ்நாடுமின்சார ஒழுங்குமுறை ஆணையசெயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.