பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகன் திருவுருவச்சிலை நிறுவப்படும் என தமிழக முதல்வர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, பன்முகவளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதும் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 2020-2021-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பெயர் பட்டியலை பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் மொத்தம் 38 மாவட்டத்துக்கு 114 பள்ளிகள் அவ்விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் சென்னையில் வியாசர்பாடி தொன்போஸ்கோ அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, திருவான்மியூர் சென்னை தொடக்கப்பள்ளி, கோடம்பாக்கம் சென்னை தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, செங்கல்பட்டில் காட்டாங்கொளத்தூர் ஓட்டேரிவிரிவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அச்சிறுப்பாக்கம் பெரும்பேர்க்கண்டிகை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி, மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காஞ்சிபுரத்தில் மருதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.