ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வருமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு

111 0

 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டாண்டுகாலமாக விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சாசன சிறப்பு அமர்வில் நடைபெற்றது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபி்ல்சிபில், தமிழகத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சார நிகழ்வை பொய்யையும், அவதூறுகளையும் கூறி நிறுத்தப் பார்க்கக்கூடாது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வு மற்றும் பண்பாட்டுடன், கலாச்சார ரீதியாக கலந்துவிட்ட ஒன்று. கடந்த 2017 முதல் 2022 வரை ஜல்லிக்கட்டு விதி மீறல் தொடர்பாக எந்தவொரு புகாரும் இல்லை.

ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்யக்கோர பீட்டா அமைப்புக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அந்த அமைப்பு சட்டப்பூர்வமான அமைப்பும் இல்லை.தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன, என காரசாரமாக வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகள் குறிப்பிட்ட இடைவெளியில் எப்படி ஓடும்?. ஒருவர் மட்டும் தான் காளையை அடக்குவாரா அல்லது பலர் அதன் மீது பாய்வார்களா?. 100 மீட்டர் தூரம் ஓடி காளைகள் எப்படி பாதுகாப்பாக வெளியேறுகின்றன?. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு கபில்சிபில், தமிழகத்தில் எவ்வாறு சிறப்பாக, பாதுகாப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. அதைக்காண உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வர வேண்டும், என தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுத்தார்.அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.6-க்கு தள்ளி வைத்துள்ளனர்.