உணவா ? கல்வியா ? என்ற பிரச்சினையே தற்போது பெற்றோர்களுக்குள்ளது

133 0

நாட்டின் மந்த போசணை தொடர்பில் ஆராய்ந்து நீண்டகால கொள்கை திட்டத்தை வகுக்க பாராளுமன்ற தெரிவு குழுவை அமைக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான மனித வளம் இருந்தால் தான் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமது பிள்ளைகளுக்கு  உணவா அல்லது கல்வியா என்ற பிரச்சினையை பெற்றோர் தற்போது எதிர் கொண்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வாழ்வதற்கான நாட்டை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு முழு நாட்டையும் இல்லாதொழித்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள் மீதான விவாதம் இடம்பெறுகிறது.நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள் மற்றும் பிள்ளைகள் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பழமையான எமது கல்வி முறைமையை மறுசீரமைக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். நடைமுறை கல்வி திட்டம் உலக நடப்புக்கு பொருத்தமற்றதாக உள்ளது. 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மானியத்தை கொண்டு இந்த மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க முடியுமா என்பது பிரச்சினைக்குரியது.

நாட்டில் பெரும்பாலான பெற்றோர் இன்று தமது பிள்ளைகளை பாடசாலைக்கு தொடர்ந்து அனுப்புவதா அல்லது பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதா என்ற இரு பிரதான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள்.இந்த இரு தேவைகளையும் நிறைவேற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளார்கள்.

80 பக்கங்களை கொண்ட கொப்பி ஒன்றின் விலை 120 ரூபாவாகவும்,120 பக்கங்களை கொண்ட கொப்பி ஒன்றின் விலை 250 ரூபாவை காட்டிலும் உயர்வடைந்துள்ளது,பேனை ,பென்சில் ஒன்றின் விலை 40 ருபாவாகவும்,புத்தக பை 3,000 ரூபாவாவை காட்டிலும்,காலணி 4,000 ரூபாவை காட்டிலும் உயர்டைந்துள்ளது.

80 அல்லது 120 பக்கங்களை கொண்ட கொப்பியை எத்தனை நாட்களுக்கு பாவிக்க முடியும். ஒரு பிள்ளையை முதலாம் தவணைக்கு அனுப்பும் போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாடசாலை பொருட்களை கொள்வனவு செய்யும் போது குறைந்தப்பட்சம் 20,000 ரூபாவாவது செலவிட வேண்டும்.இதுவே யதார்த்த நிலைமை.

ஒட்டுமொத்த பாடசாலை மாணவர்களுக்கும் கொப்பி,புத்தக பை மற்றும் காலணியை வழங்க அரசாங்கத்திடம் மானியம் கிடையாது.கல்வி அமைச்சுக்கு 232 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் கல்விக்கு குறைந்த மானியத்தை ஒதுக்கியுள்ள நாடாக இலங்கை இன்று இடம்பிடித்துள்ளது.

ஆசிரியர்களின் சாரியை இன்று கல்வி சேவையில் பிரதான பிரச்சினையாக்கியுள்ளார்கள். அரசாங்கத்தின் அதிகாரிகளில் ஒருசிலரே இந்த விடயத்தை பிரச்சினைக்குள்ளாக்கினார்கள். அரச சேவையாளர்களின் ஆடை தொடர்பில் அரச சேவைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நேற்று (நேற்று முன்தினம்) விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

குறித்த சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அரச சேவையாளர்களின் ஆடை தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.கல்வியில் தற்போது ஆடை ஒரு பிரச்சினையல்ல பல பிரச்சினைகள் கல்வி சேவையில் காணப்படுகிறது.11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றமில்லை.உரிய காலத்தில் சம்பளம் பெற முடியாத 30 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளார்கள்.சம்பள அதிகரிப்பு குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை.

கல்வி தொடர்பில் அக்கறை கொள்ளும் தரப்பினரை மாகாண ஆளுநர்களாக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன். நாட்டில் கல்வி மற்றும் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது,இவ்விரு சேவைகளையும் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஆசிரிய சேவையில் நிலவும் பிரச்சிகைளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடின் பிரச்சினைகள் தொடர்ந்து தீவிரமடையும்.

அதிபர் ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு மூன்றில் ஒரு பகுதி அளவில் தீர்வு வழங்கப்பட்டது,மிகுதி தீர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

அரச அதிகாரிகளின் ஒருசில தவறினால் பிரச்சினை தோற்றம் பெற்றது. ஆனால் ஆசிரியர்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தேசிய கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றியமைக்கும் திட்டம் சிறந்தது.ஆனால் இந்த திட்டத்தை அமுல்படுத்தப்படும் போது முறையான கொள்கை திட்டங்களை வகுக்க வேண்டும்.கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு விசேட தொழிற்பயிற்சி திட்டங்களை வலய மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மகளிர் பாதுகாப்பு மற்றும் விவகராங்கள் அமைச்சுக்கு குறைந்தப்பட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சமூக கட்டமைப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித திட்டங்களும் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

நாட்டில்  4 வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் 42 சதவீதமானோர் மந்தபோவனை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.நான்கு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் மந்த போசனை நிலை தொடர்பில் எவ்வித ஆய்வும் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

நாட்டில் நான்கு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளில் 56 ஆயிரம் பிள்ளைகள் மிக மோசமான மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் 22 இலட்சம் பிள்ளைகள் மந்த போசனை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தரவுகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?. மொத்த சனத்தொகையில் 70 சதவீதமானோர் பண வீக்கத்தினால் ஒருவேளை உணவை தான் உட்கொள்கிறார்கள்.

மந்த போசனை தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவு குழுவை உருவாக்கி,நீண்டகால கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும்.பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது,ஆரோக்கியமான மனித வளம் இருந்தால் தான் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.