பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசியலில் மாத்திரமன்றி ஏனைய துறைகளிலும் அதிகரிக்க வேண்டும்

171 0

பெண்கள் பிரதிநிதித்துவத்தை அரசியலில் மாத்திரமின்றி ஏனைய துறைகளுக்கும் அதிகரிக்கவேண்டும். இந்தியா,  உட்பட சர்வதேச நாடுகளில் முக்கியமான அமைச்சுக்களில் பெண்கள் இருந்து வருகின்றனர். நாங்கள் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. டொனமூர் காலத்தில் 2வீதமாக இருந்த பெண்கள் பிரதிநித்தும் தற்போது 5.3வீதமாக இருக்கின்றது.

இந்த நிலைக்கு நாங்கள் அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும், அதனால்  இந்த எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தியா  போன்ற நாடுகளில் பெண்கள் முக்கியமான அமைச்சர் பதவிகளை வகிப்பதுடன் அதற்கு மேலான உயர் பதவிகளிலும் சிறப்பாக பிரகாசிக்கின்றனர், அந்த நிலை எமது நாட்டில் ஏற்படுத்தவேண்டும். எமது அரசாங்கத்தில் தலதா அத்துகோரள நீதி அமைச்சராக இருந்தார்.

அதேபோன்று பவித்ரா வன்னியாரச்சி சுகாதாரா அமைச்சுப்பதவியில் இருந்துள்ளா். அது தொடர்பில் அனைவரும் விசேட கவனம் செலுத்தி வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

அரச துறையில் மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை  அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

குறிப்பாக கல்வித்துறையில் அதிபர்கள் ஆசிரியர்கள், சுகாதார சேவை உள்ளிட்ட பல துறைகளிலும் 50 வீதத்துக்கும்  மேற்பட்டவர்கள் பெண்களாகவே உள்ளனர்.

அந்த வகையில் தனியார் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.

அத்துடன் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துவதுடன் அனாதைகளான சிறுவர்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக புதிய சிறுவர் பாதுகாப்பு சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

பெற்றோர்களை இழந்த அனாதையான சிறுவர்கள் நாட்டில் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். அவர்களுக்கான கல்வி, தேவையான ஆசிரியர்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதேபோன்று நாட்டில் உள்ள முதியோர்கள் அங்கவீனர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்தல், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்காக வழங்கப்படும் நிதி உட்பட பெரும் செலவுகளுக்கு மத்தியிலேயே அந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அழகான திரை உள்ள போதும் அதன் உள்ளே இருப்பதை யாரும் பார்ப்பதில்லை அதனை எவரும் திறந்து பார்க்காமலே பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதனால் நாங்கள் அனைவரும் அதனை திறந்துபார்க்கவேண்டும்.

அத்துடன் சமுர்த்தி உதவி வழங்குவது அவசியம் எனினும் அதற்கான தகைமை உள்ளவர்களுக்கு மட்டுமே உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

ஏனையோர் அதிலிருந்து நீக்கப்பட வேண்டும்.அனைவருக்கும் உதவிகளை வழங்குவதற்கு உண்மையில் அரசாங்கத்திடம் போதியளவு நிதி கிடையாது.

அந்த வகையில் புதிதாக அந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளும் போதும் யாரை அந்தத் திட்டத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளலாம் அவர்கள் அதற்கான தகுதி உடையவர்களா என்பது தொடர்பில் இனங்காணப்பட்டு அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.