அதுரலிய ரத்ன தேரர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்ததை மீளப் பெற்றால் அவரை கட்சியில் மீள இணைத்துக் கொள்ள தயாராக உள்ளதாக, ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் ஹெடிகல்லே விமலசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதுரலிய ரத்ன தேரருக்கு வேறு பிரச்சினைகள் இருப்பின் அதனை பேசி தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஹெடிகல்லே விமலசார தேரர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது ரத்னதேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் நிமித்தம் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களை ஜாதிக ஹெல உறுமயவுக்கு வழங்குவதாக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், எனினும் வாக்குகள் குறைவாக கிடைக்கப் பெற்றமையால் ஒரே ஒரு ஆசனம் மட்டுமே கிட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த ஆசனத்தையே ரத்தின தேரருக்கு தமது கட்சி வழங்கியதாகவும் ஹெடிகல்லே விமலசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கட்சிக்கே குறித்த தேசியப் பட்டியல் ஆசனம் சொந்தமானது எனக் குறிப்பிட்ட அவர், சுயாதீனமாக செயற்பட ரத்தின தேரருக்கு உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.