நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு சமவயதான பெண்கள் என்பது காரணமா?

97 0

நியூ ஸிலாந்து, பின்லாந்து நாடுகளின் பிரதமர்கள் சந்தித்துக்கொண்டமைக்கு அவர்கள் சம வயதுடைய பெண்கள் என்பது காரணமல்ல என இரு பிரதமர்களும் கூறியுள்ளனர்.

பின்லாந்து பிரதமர் சனா மரின், தற்போது நியூ ஸிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அவர், நியூ ஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுடன் இணைந்து பங்குபற்றிய செய்தியாளர் மாநாடு.. நடைபெற்றது.

அப்போது நியூ ஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனிடம் கேள்வி எழுப்பிய நியூ ஸிலாந்து ஊடகவியலாளர் ஒருவர், ‘நீங்கள் இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமைக்கு சம வயதுடையவர்கள் என்பதும் இருவருக்கும் பொதுவான பல விடயங்கள் உள்ளமையும் தான் காரணமா என மக்கள் எண்ணுகின்றனர்’ என்றார்.

அக்கேள்விக்கு பதிலளித்த ஜெசிந்த ஆர்டென், இரு பெண்கள் சந்தித்துக்கொள்வதற்கு அவர்களின் பாலினம் மட்டும் காரணமல்ல என்றார்.

‘பராக் ஒபாமாவும் ஜோன் கீயும் சந்தித்தமைக்கு அவர்கள் சம வயதானவர்கள் என்பதுதான் காரணமா  என எவரும் கேள்வி எழுப்பினார்களா எனத் தெரியவில்லை எனவும் 42 வயதான ஜெசிந்தா ஆர்டென் கூறினார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 1961 ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிறந்தவர். நியூ ஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜோன் கீ 1961 ஆகஸ்ட் 9 ஆம் திகதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அவர் பட்டியலிட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இச்சந்திப்பு ஒரு வாய்ப்பாகும் எனவும் கூறினார்.

அதன்பின், பின்லாந்து பிரதமர் சனா மரின் (37) பேசுகையில், ‘நாம் சந்தித்தமைக்கு காரணம் நாம்  பிரதமர்கள் என்பதனால் தான்’ என்றார்.