சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி மணல் கடத்த முயன்ற ஒருவரை பிடித்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்த இளைஞரொருவர் மணல் அகழ்வு கும்பலால் தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் வலிக்கண்டி, குடத்தனை மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய பவானந்தராசா தரிசியன் என்றும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
திங்கட்கிழமை (28) இரவு 9:00 மணியளவில் வலிக்கண்டிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாகனமொன்று மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையில் கிராம இளைஞர்களால் வாகன உரிமையாளர் சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விசேட அதிரடிபடையினரிடம் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த கப் ரக வாகன உரிமையாளர் மற்றும் இளைஞர்கள் இன்று செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் வலிக்கண்டிப் பகுதிக்கு சென்று குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.