‘பிராண்ட்’ என்பது வேறு ஒன்றுமல்ல, நம்பிக்கைதான்: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் கருத்து

116 0

பிராண்ட் என்பது வேறு ஒன்றுமல்ல, நம்பிக்கைதான் என  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர், மேலாண் இயக்குநர் (சிஎம்டி) எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ‘தரம் மற்றும் பிராண்டிங்’ என்ற தலைப்பில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர், மேலாண் இயக்குநர் எம்.கிருஷ்ணன் பேசியதாவது: மற்ற பொருட்களுக்கும், உணவுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், மற்ற பொருட்களின் தரம் என்பது ஆய்வக பரிசோதனையோடு நின்றுவிடும். ஆனால், உணவு அப்படியல்ல. ஆய்வக பரிசோதனையின் நீட்சியாக ஒன்று உள்ளது. அதுதான் நமது நாக்கு. மனிதர்கள் அனைவருக்கும் சுவை மொட்டுகள் ஒன்றாக இருக்கலாம். ஆனால், நாம் சுவைப்பது மாறுபடுகிறது. எனவே, வெவ்வேறு சுவைகளுக்கு ஏற்ப சமைப்பது அவசியமாகிறது.

தரம்தான் பிரதானம் என்று இருக்கும்போது, எப்படி ஒருவர் வெற்றிபெறுவது?. அதற்குதான் தரநிர்ணயம் அவசியமாகிறது. கோயில் பிரசாதங்களை அதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணத்துக்கு திருப்பதி லட்டை குறிப்பிடலாம். பல ஆண்டுகளாக அதன் சுவை மாறாமல் இருப்பதற்கு, அதன் தயாரிப்பு திட்டமே காரணம். அதை மாற்றாமல் பின்பற்றி வருகின்றனர். நாம் தயாரிக்கும் உணவுப் பொருள் கோவையில் விற்கப்பட்டாலும், மும்பை அல்லது துபாயில் விற்கப்பட்டாலும் அங்கும் ஒரே சுவையில் இருந்தால், தர நிர்ணயம் செயல்பாட்டில் உள்ளதை தெரிந்துகொள்ளலாம்.

எங்களது தனித்துவமான தயாரிப்பு மைசூர்பா. டன் கணக்கில் மைசூர்பா விற்பனையானாலும், ஒவ்வொரு மைசூர்பாவும் ஒரே மாதிரி இருக்கும். அவை கையால் தயாரிக்கப்படுகிறது என்றாலும்கூட. தரமான பொருள் இல்லாமல் பிராண்டிங் சாத்தியம் இல்லை. ஆனால், தரமான பொருள் மட்டுமே பிராண்டிங்கை உறுதி செய்யாது. வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் அந்த தரமான பொருளை கவர்ச்சிகரமாக வழங்கி, அவர்களையே பிராண்டின் தூதுவர்களாக மாற்ற வேண்டும். தனித்துவமான வகையில் வாடிக்கையாளரை அணுகும்போதுதான் இது சாத்தியம்.

பிராண்ட் என்பது வேறு ஒன்றுமல்ல, நம்பிக்கைதான். இதுதான் வெற்றி என யாரும் வரையறுக்க இயலாது. ஒரு இலக்கை அடைவதுதான் வெற்றி என கருதினால், வெற்றியின் ஒவ்வொரு அடியையும் உங்களால் அனுபவிக்க இயலாது.

உங்கள் இலக்கை நீங்கள் அடையும் கணத்தில், மேற்கொண்டு நடைபோடும் உற்சாகம் உங்களிடத்தில் இருக்காது. ஆனால், விடாதுமுயலும் ஆர்வத்துடன் நீங்கள் இருந்தால், நிம்மதியை அனுபவிக்கலாம். உங்கள் பயணம் நிம்மதியாக இருக்க வேண்டும்.

நிம்மதி, உங்களுக்கு ஏராளமான ஆற்றலை அளிக்கும். அந்த ஆற்றல் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவும். உணவு சந்தைக்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. நம்மிடம் திறமையான நபர்கள் உள்ளனர். உணவு வகைகளும் ஏராளமாக உள்ளன. நம்மிடம் உள்ள வளங்களை அரசு சரியாக ஒருங்கிணைத்தால், உணவு சந்தையில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.