தான் எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் என, கருதுவதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அதனாலேயே முப்பது வருட யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் வைத்திய பீடத்தை நிறுவ தான் நடவடிக்கை எடுத்ததாகவும், அதற்கு காரணம் முப்படையில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவியமையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தான் அதனை பலவந்தமாக நிறைவேற்றியதாக தற்போது குற்றம்சாட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், அதனை தான் பலவந்தமாக செய்யவில்லை என, இலங்கை வைத்திய சபையின், அப்போதைய தலைவராக இருந்த ஹலோ பொன்சேகாவின் சாட்சியம் உள்ளதாகவும் கோட்டாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைத்திய சபையின் பரிந்துரைகள் மற்றும் தலைவரது பணிப்புரைக்கு அமைய உயர்ந்த தரத்தில் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டிலுள்ள ஏனைய வைத்திய பீடங்களைப் போல, கொத்தலாவல வைத்திய கல்லூரியும் தரமானது என, பலர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கோட்டாபய கூறியுள்ளார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் தொடர்பில் சில பயம் இருந்த போதும், கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு அனுமதியளித்தது பயத்தினால் அல்ல என, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஹலோ பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.