எமது அரசாங்கம் அரசியல் ரீதியில் எடுத்த ஒருசில தீர்மானங்கள் தேயிலை தொழில் துறை உட்பட பெருந்தோட்டத்துறையை பாதித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
தவறான தீர்மானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு முதல் பெருந்தோட்டத்துறை உற்பத்திகள் மேம்படுத்தப்படும் என்ற நம்பிக்கையுள்ளது என பெருந்தோட்டத்துறை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 30) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கைத்தொழில், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
பெருந்தோட்டத் தொழிற்துறை கடந்த இரண்டு வருட காலமாக உர பற்றாக்குறையால் உரிய இலக்கை அடையவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.நெருக்கடியான சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிற்துறை உற்பத்திகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்துள்ளது.
20221ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை உற்பத்தி ஏற்றுமதிகள் ஊடாக 3.8 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கப் பெற்றது.
தேயிலை ஏற்றுமதியினால் 1.3 பில்லியன் டொலர்களும் இறப்பர் உற்பத்தி ஏற்றுமதி ஊடாக 1.4 பில்லியன் டொலர்களும் தெங்கு மற்றும் தெங்கு சார் உற்பத்தி ஏற்றுமதி ஊடாக 836 மில்லியன் டொலர்களும் கருவாப்பட்டை மற்றும் சிறு ஏற்றுமதி பயிர் ஊடாக 456 மில்லியன் டொலர்களும் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளன.
2022ஆம் ஆண்டு தேயிலை, இறப்பர், தெங்கு, கறுவாப்பட்டை மற்றும் சிறு ஏற்றுமதி ஊடாக 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உரம் இறக்குமதி மற்றும் பாவனை மீதான தடையினால் தேயிலை தொழிற்துறை ஏனைய பயிர்ச்செய்கைகளை காட்டிலும் பன்மடங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் உலக சந்தையில் தேயிலை உற்பத்திக்கான போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. பொருளாதார பாதிப்பு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளினால் தேயிலை தொழிற்துறையில் வருடாந்த இலக்கை அடைய முடியவில்லை.
தெரிவு செய்யப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்காக உரம் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. கிளைபோசெட் உரம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. உர பற்றாக்குறைக்கு 2023 ஆம் ஆண்டு முதல் காலப்பகுதிக்குள் தீர்வு வழங்கப்படும். இலங்கை தேயிலை நாமத்தை ஸ்தீரப்படுத்திக் கொள்ளாவிட்டால் தேயிலை தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தீர்வு காண முடியாது.
இலங்கையின் ஏற்றுமதி உற்பத்திகளின் நாமத்தை சர்வதேச மட்டத்தில் ஸ்தீரப்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
நேரடியாக தேயிலை கன்றுகளை விநியோகிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேயிலை தொழிற்துறையை குறுகிய காலத்தில் மேம்படுத்த துரிதகர திட்டங்கள் நிறுவன அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களினால் தேயிலை தொழிற்துறை வீழ்த்தியடைந்தது என்பதை மறுக்கவில்லை.தவறுகளை திருத்திக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறப்பர் சார் உற்பத்திகளை மேம்படுத்தவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பூகோள காரணிகளினால் சர்வதேச சந்தையில் இறப்பர் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், தெங்கு உற்பத்திகளை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.தென்னை மரங்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் மாத்திரம் 6 மில்லியன் தென்னை கன்றுகளை உற்பத்தி செய்துள்ளோம்.
தென்னை மரங்களில் ஓலைகளை தாக்கும் புதிய வகை தொற்று நோயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய உற்பத்திகளை மேம்படுத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அரசியல் தரப்பினல் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பெருந்தோட்டத்துறை உற்பத்திகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்