தேசிய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

130 0

பொருளாதார நெருக்கடிக்கு பெருந்தோட்டக் கம்பனிகளும் காரணம். நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய அந்நிய செலாவணிகளை வெகுவாக கம்பனிகள் குறைத்துள்ளன.

எனவே தேசிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான கம்பனிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்  என இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 30) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில்  கைத்தொழில் அமைச்சு, வர்த்தக,வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிக்கு பெருந்தோட்டக் கம்பனிகளும் காரணம். நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய அந்நிய செலாவணிகளை வெகுவாக கம்பனிகள் குறைத்துள்ளன.

எனவே தேசிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான கம்பனிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைத்து தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும். பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் இது தொடர்பில நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று தேயிலை மலைகள் கடாக்கப்பட்டுள்ளன. நிர்வாகம் தங்களது இயலாமையை மறைக்க தொழிலாளர்கள் பற்றாக்குறையென  காரணம் கூறுகிறது.

இது பொய். தொழிலாளர்கள் விரும்பி தோட்டங்களில் இருந்து வெளியேறுவதில்லை. அவர்கள் வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பெருந்தோட்டத்துறையை காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பு எமக்கு இருக்கிறது. இதில் அசட்டையாக இருந்துவிட்டால் எதிர்காலத்தில் நாடு பெரும் பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுக்கும்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், யாசகர்கள்கூட பெறாத குறைவான சம்பளமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

8 மணித்தியாலங்கள் வேலை செய்தாலும் அரைநாள் சம்பளமே வழங்கப்படுகிறது. சட்டவிராேத இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று தொழிலாளர்கள் வருடக்கணக்கில் தங்கள் வீட்டுத்தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த வீட்டுத் தோட்டங்களை தோட்ட நிர்வாகம் பலவந்தமாக பறிக்கிறது.

இதுவும் சட்டவிரோதமானது. தோட்ட நிர்வாகங்களுக்கு சார்பாகவே அந்த பகுதி பொலிஸாரும் நடந்துகொள்வதுதான் கவலைக்குரிய விடயம்.

எனவே இதுதொடர்பாக பெருந்தோட்ட அமைச்சு கவனம் செலுத்தவேண்டும். பெருந்தோட்ட நிர்வாகங்களை கண்காணிக்கும் பிரிவும் பெருந்தோட்ட அமைச்சில் இருக்கிறது. அதனை செய்ய வேண்டும் என்றார்.