சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை நாடுவதை போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
அதனூடாக பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் செயற்படுத்தப்பட்ட மானியத் திட்டத்திற்கு அதிகப் பணம் செலவழித்ததன் காரணமாக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மேலும் அதிகரித்தது இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.