விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த முன்னாள் இராணுவ அதிகாரி நேற்று முன்தினம் இரவு கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் கம்பஹா பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் வசித்து வரும் 42 வயதான முன்னாள் இராணுவ அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவ பரிந்துரைக்கு அமைய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
சந்தேக நபர் தனது வீட்டின் குளியல் அறையில் தண்ணீர் வழிந்தோடும் குழாய்குகள் சூட்சுமான முறையில் இந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கைத்துப்பாக்கியை வைத்திருப்பதாகவும் அதனை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் செய்வதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கைத்துப்பாக்கியும் தோட்டக்களும் கைப்பற்றப்படடுள்ளன.
சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கியை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த துப்பாக்கியில் சில தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் இந்த துப்பாக்கியை பயன்படுத்தி பல முறை வானத்தை நோக்கி சுட்டுள்ளதாகவும் அவர் இதனை பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா என்பதை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரை பொலிஸார் நேற்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.