9 ஏ சித்தி பெற்ற மாணவனை தீ வைத்து எரித்த சம்பவம் – பிரதான சந்தேக நபர் கைது

153 0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற மாணவனை தீ வைத்து எரித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் இவ்வருடம் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்ததை தந்தையுடன் தனது பாட்டிக்கு அறிவிக்க சென்றுள்ளார்.

இதன் போது குறித்த சந்தேகநபர் தந்தையிடம் பணம் கேட்டு  தராததால் மாணவனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதன்போது மாணவன் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அம்பிட்டிய, தம்பேவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய தென்னக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பல்வேறு குற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர் ஏற்கனவே கண்டி நீதிமன்றத்தினால் 4 தடவைகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, பெட்ரோல் போத்தல், 720 மில்லிகிராம் கஞ்சா, கையடக்கத்தொலைபேசி மற்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.