அதிசயங்கள் எப்போது வேண்டுமானலும் நடக்கும். அதற்கு நம்பிக்கை முக்கியம்…ஆம் அப்படியொரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.
அமெரிக்காவில் 50 வருடங்களுக்கு முன்னால் காணாமல்போன ஒருவர் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்த மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அல்டா அபாண்டென்கோ. இவருக்கு மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டு தனது குழந்தையை பார்த்து கொள்ள பாதுகாவலர் ஒருவரை நியமித்துள்ளார். இந்த பாதுகாவலரால் மெலிசா கடத்தப்படுகிறார். மெலிசாவை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியுள்ளனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 51 ஆண்டுகளுக்குப் பிறகு அல்டா அபாண்டென்கோவை நற்செய்தி தேடி வந்தது. கடந்த செப்டம்பர் மாதம், சார்லஸ்டன் அருகே காணாமல்போன அவரது மகள் இருப்பதாக அல்டாவுக்கு செய்தி கிடைக்கிறது. இந்த தகவல் கிடைப்பதற்கு அமெரிக்காவின் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் உதவி இருக்கிறது.
பின்னர் அப்பெண்ணுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடக்கிறது. இதன் மூலம் அப்பெண் தான் மெலிசா என்பது உறுதியானதை தொடர்ந்து 51 ஆண்டுகளுக்குப் பிறகு மெலிசா தனது பெற்றோருடன் இணைந்துள்ளார்.
”என்னுடைய உணர்வுகளை விவரிக்க முடியவில்லை. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். நாங்கள் 50 வருடங்களாக எங்களது மகளை தேடி வருகிறோம். ஆனால் என் மகள் அரை மணி நேர தொலைவில்தான் இருந்திருக்கிறாள்” என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார் அல்டா. மேலும் தங்கள் மகளை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி என மெலிசாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.