சென்னையில் ஆயிரம்விளக்கு, ஆலந்தூர், மாதவரம் உள்ளிட்ட 7 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு ரூ.1463.14 கோடி ஒதுக்கியுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் குறிப்பாக, மாநகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் தேவையான இடங்களில் பாதாளசாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 7 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்த ரூ.1463.14 கோடி நிதியை நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கியுள்ளது. மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிதி ஆகியவை இதில் அடங்கும்
கழிவுநீர் கட்டமைப்புகள்: குறிப்பாக ஆயிரம் விளக்குதொகுதி பகுதி 9-ல் தேனாம்பேட்டையில், கழிவுநீர் கட்டமைப்புகள் மேம்படுத்துதல் மற்றும் சாலையோர கழிவுநீர் உந்து நிலையம்அமைக்க ரூ.52.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் பகுதியில் பல்வேறு பணிமனைகளில் தற்போதுள்ள கழிவுநீர் அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளுக்காக ரூ.122.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாதவரம் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்க ரூ.404.08 கோடியும், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், புழல் மற்றும் மாத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.575.18 கோடி, இடையான்சாவடி, சடையான்குப்பம், கடப்பாக்கம் பகுதிகளுக்கு ரூ.219.10 கோடி, செம்மஞ்சேரியில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.71.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மாநகராட்சியின் பகுதி 7-ல் அம்பத்தூர் அன்னை சத்யா நகர், சிவானந்தா காலனி, மகாகவி பாரதி நகர், படவட்டம்மன் தொழிற்பேட்டை மற்றும் டைனி ஷெட் பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.18.19 கோடியும் என மொத்தம் ரூ.1463.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்குரூ.365.80 கோடி, மாநில அரசின்பங்கு ரூ.438.93 கோடி, உள்ளாட்சிகள் பங்கு ரூ.658.41 கோடியாகும்.