சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் சமூக நீதி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துரையாடினார். சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் சர் வில்லியம் மெயர் அறக்கட்டளை – கருத்துரையாடல் நிகழ்ச்சி நேற்று பல்கலைக்கழகத்தில் நடந்தது. ‘சமூக நீதி – நேற்று, இன்று,நாளை’ என்ற தலைப்பில் நடந்தஇந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
நிகழ்வில் தமிழக அரசு மாநில திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன், தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஜி.கருணாநிதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வரும் வெள்ளிக்கிழமை 90-வது வயதை எட்டும்தி,க. தலைவர் கி.வீரமணிக்குவாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ‘தந்தை பெரியார் – ஆசிரியர் வீரமணி அறக்கட்டளை’ 6 மாதங்களில் தொடங்கப்படும் என மு.நாகநாதன் அறிவித்து, அறக்கட்டளைக்கு முன்தொகையாக ரூ.25 ஆயிரத்தை வழங்கினார். அவரைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சார்பில் ரூ.25 ஆயிரமும், பேராசிரியர் ஜகதீசன் ரூ.10 ஆயிரமும் வழங்கினர்.
கலந்துரையாடலில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசியதாவது: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் பொருளாதார மாணவனாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்றதற்காக சர் வில்லியம் மெயருடைய பரிசை பெற்றிருக்கிறேன்.சமூக நீதியை பொறுத்துவரை நேற்றைய வரலாறு அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இடஒதுக்கீடு என்பது வெறும் காகிதத்தில் ஆணையாக மட்டும் இருந்தால் மட்டும் போதாது. சமூக அநீதியில் இருந்து மீண்டுவரவே சமூக நீதி தேவைப்பட்டது. மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதுதான் சமூகநீதி.இது சலுகையல்ல உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.