வாதாடும் திறமை, மொழி ஆற்றலை மேம்படுத்த இளம் வழக்கறிஞர்களுக்கு விரைவில் ‘லா அகாடமி’

127 0

இளம் வழக்கறிஞர்களின் வாதாடும் திறமை, மொழி ஆற்றலை மேம்படுத்த சென்னையில் விரைவில் ‘லா அகாடமி’யை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்யும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே நடைபெறும் வழக்கறிஞர்களுக்கான பார் கவுன்சில் என்ரோல்மென்ட் நிகழ்வு, தற்போது மாதத்துக்கு 2 முறை நடக்கிறது. ஒருபக்கம் வழக்கறிஞர் தொழில் மீதான மோகம் அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் திறமையான, மொழி ஆற்றலுடன் கூடிய ஜூனியர் வழக்கறிஞர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது.

அதேநேரம், தனது கட்சிக்காரர்களிடம் தொழில் நெறிமுறைகளை மீறுதல், சட்டவிரோதமாக செயல்படுதல், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுதல் என வழக்கறிஞர்களுக்கு எதிராக பார் கவுன்சிலுக்கு வரும் குற்றச்சாட்டு புகார்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் ‘இந்து தமிழ் திசை’ யிடம் கூறியதாவது.

தற்போதைய நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதில் 85ஆயிரம் வழக்கறிஞர்கள் மட்டுமே ‘சர்டிபிகேட் ஆஃப் பிராக்டீஸ்’ சான்றிதழை சமர்ப்பித்து வழக்கறிஞர்களாக தொழில் புரிந்து வருகின்றனர்.

ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பதிவு

சுமார் 40 ஆயிரம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழில் அல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுள்ள நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட வழக்கறிஞர்கள் இல்லை.

தமிழகத்தில் தற்போது 15 அரசு சட்டக்கல்லூரிகள், 2 தனியார் சட்டக்கல்லூரிகள் தவிர்த்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என 50-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 7 ஆயிரம் வழக்கறிஞர்களும். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து 3 ஆயிரம் பேர் என மொத்தம் சுமார் 10 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் வழக்கறிஞர்களாக பதிவு செய்து வருகின்றனர்.

இவர்களி்ல் அரசு சட்டக்கல்லூரிகளில் பயின்ற, 30 வயதுக்கு உட்பட்ட 1,500 இளம் வழக்கறிஞர்களுக்கு 24 மாதங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக தமிழக அரசு ரூ.3 ஆயிரம் வழங்கி வருகிறது. குறிப்பாக பெண் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி 23 ஆயிரம் பெண் வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆனால் இதில் 40 சதவீதம் பேர் வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதில்லை. அதேபோல மரணமடையும் வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு சேமநல நிதியாக தற்போது ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், சுமார் 100 வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு இந்த சேமநல நிதி வழங்கும் நிகழ்ச்சி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தமிழக முதல்வர் முன்னிலையில் விரைவில் நடைபெறவுள்ளது.

திறனை வெளிப்படுத்த முடியும்

அதேபோல், நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்க ஜுடிசியல் அகாடமி இருப்பதுபோல, இளம் வழக்கறிஞர்களின் வாதாடும் திறமை, மொழி ஆற்றலை மேம்படுத்த சென்னையில் ‘லா அகாடமி’ அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களாக பதிவுசெய்யும் இளம் வழக்கறிஞர்களுக்கு ‘லா அகாடமியில்’ 6 மாதம் பயிற்சி அளித்து அவர்களின் தொழில் திறனை முழுமையாக, பயமின்றி வெளிப்படுத்த வாய்ப்பாக அது அமையும்.

தற்போது பார் கவுன்சிலும், சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் நீதிபதி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் ஏராளமான இளம்வழக்கறிஞர்கள் சேர்ந்து பலன் அடைந்து வருகின்றனர். இதுவரை 48 சிவில் நீதிபதிகள், 17 அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், ஒரு மாவட்ட நீதிபதியை பார் கவுன்சில் உருவாக்கியுள்ளது. தற்போது 23 அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் பிரதான தேர்வி்ல் தேர்ச்சி பெற் றுள்ளனர்.

அதேபோல தொழில் நெறி மீறுதல் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு எதிராக ஆண்டுதோறும் 600 முதல் 700 புகார்கள் பார் கவுன்சிலுக்கு வருகின்றன. அதில், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.