அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரப் பகிர்வுக்கு எதிர்க்கட்சி தயாராகவே உள்ளது. இருப்பினும் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கு நாட்டில் இருக்கும் இனப்பிரச்சினை மற்றும் அதிகார பகிர்வு என்பவற்றை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்த ஜனாதிபதி முதலில் ஆளுங்கட்சி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைக்குமா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வரவு-செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது தான் முன்னின்று அதிகார பகிர்வினை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அன்று பாராளுமன்றத்தில் எதிரணியின் பக்கம் விரலை சுட்டிக்காட்டி அதிகாரப் பகிர்வுக்கு தயாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். எப்போதும் அதி என்பதை அதிகாரப் பகிர்வுக்கு எதிர்க்கட்சி தயாராகவே இருக்கிறது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
இருப்பினும் அன்று எதிர் கட்சியை பார்த்து கேள்வி எழுப்பிய ஜனாதிபதி தனக்கு பின்னால் இருப்பவர்களை பார்த்து இந்த கேள்வியை கேட்பதற்கு மறந்து விட்டார். நாம் எப்பொழுதும் பொறுப்புடனே செயல்படுகிறோம். எதிர்க்கட்சி என்ற வகையில் அரசியல் வரப்பிரசாதங்களுக்காக எமது கொள்கைகளை காட்டிக் கொடுக்க மாட்டோம்.
ஜனாதிபதி ரணில் தன்னை பாதுகாக்கும் தரப்பினரிடம் முதலில் அதிகாரப் பகிர்வுக்கு இணங்குவார்களா? என்பதை கேட்க வேண்டும்.
13 ஆவது அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று கூறியவர்கள் ஜனாதிபதியிடம் இன்று இருக்கிறார்கள்.
மேலும் பொதுஜன பெரமுன மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டில் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சியாகும்.
இந்நிலையில் அதிகாரப் பகிர்வுக்கு பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதம் மற்றும் நிறைவேற்றுவதற்கான அனுமதி கிடைக்குமா? என்பதை ஜனாதிபதி முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லை எனில் நாட்டில் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை என்றார்.