பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய பாராளுமன்றம் செயற்படவில்லை என்றால் பாராளுமன்ற செயற்பாடுகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிப்போம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல இரு தடவைகள் சபையில் தெரிவித்தார்.
ஆளும் தரப்பினருக்கு பாராளுமன்ற நிலையியல் கட்டளை தொடர்பில் நாங்கள் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.
விவாதத்தில் விடயதானத்துக்கு உரிய விடயங்கள் தொடர்பில் மாத்திரம் உரையாற்றுமாறு சபைக்கு தலைமை தாங்கிய குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற சுகாதார அமைச்சு புத்தசாசனம், மத விவகாரம் மற்றும் கலாசார அலுல்கள் அமைச்சுக்கள் மீதான மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தின்போது உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, எதிர்க்கட்சி தலைவர் அமைச்சராக இருந்தபோது கலாசார நிதியம் தொடர்பில் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையை சுட்டிக்காட்டி சபையில் உரையாற்றினார். இந்த அறிக்கையைப் பார்க்கும்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித்தின் நடத்தை தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது என குறிப்பிட்டார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சந்திம எதிரிமான்னவை நோக்கி உங்களுக்கு நிலையியற் கட்டளையை நாம் முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும்.எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் இவ்வாறு உரையாற்ற முடியாது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சி தலைவரின் பெயரைக் குறிப்பிடாது உரையாற்ற முடியும் என்றார்.
இதன்போது குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே ,லக்ஷமன் கிரியெல்ல சபையை தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் சஞ்சீவ எதிரிமான்ன கணக்காய்வு அறிக்கை தொடர்பிலேயே சபையில் உரையாற்றுவதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல கோப் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டது. இந்த விசாரணைகளில் சஜித் பிரேமதாஸ மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேஇ நிலையியற் கட்டளையின்படி உறுப்பினர் ஒருவரின் நடத்தையை விமர்சித்து உரையாற்ற முடியாது. இது தொடருமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி சபையிலிருந்து வெளியேறும் என தெரிவித்தார்.
இதன்போது சபைக்கு தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் இது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிப்பதாகவும், பாராளுமன்ற விவாதத்துக்கு அமைய உரையாற்ற வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுகொண்டார்.