சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருடத்தில் நாட்டின் சுகாதார துறை பெரும் ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலைமை ஏற்படலாம் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வீட்டுச் செலவில் 50 வீதத்தை மருந்துகளுக்காக செலவிட வேண்டியுள்ளது. ஆனால் அரசாங்கமோ மொத்த செலவில் 4 வீதமான நிதியையே சுகாதார துறைக்காக ஒதுக்கியுள்ளது.
மொத்த தேசிய உற்பத்தியில் இது ஒரு வீதத்திலும் குறைவாகும். உலக முறைதான் மொத்த தேசிய உற்பத்தியில் சுகாதாரத்துக்கு 5வீதமாவது ஒதுக்கப்படவேண்டும் என்பதாகும். இதன்படி குறைந்தளவான நிதியை சுகாதார துறைக்காக ஒதுக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது.
சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நிதி வருடாந்தம் அதிகரிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் குறைத்துக்கொண்டே போகின்றது. இதன்மூலம் அடுத்த வருடத்தில் நாட்டு மக்களின் சுகாதார நிலைமை பெரும் ஆபத்துக்குள் போகும் என்பதனையே காட்டுகின்றது.
தற்போது பல்வேறு வைத்தியசாலைகளில் மருந்துகள் இன்றி நோயாளர்கள் இறக்கின்றனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் எஸ்பிரின் மருந்துகூட இல்லை.
இவ்வாறான நிலைமைக்கு சுகாதாரத்துறை தள்ளப்பட்டுள்ளது. ஆனால் சுகாதாரத்துறையில் கோடிக்கணக்கான மோசடி தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறுவதில்லை.
வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படும் பணிப்பாளர்கள் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
அவ்வாறான அதிகாரிகளின் நியமனம், அவர்களின் மோசடி தொடர்பாக கணக்காய்வாளரின் அறிக்கைையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வைத்தியசாலை கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.
அத்துடன், மருத்துவ ஆராய்ச்சு தரவுகள் காணாமல் போனமை தொடர்பில் பாரியளவில் கடந்த காலங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த விசாரணைகள் மறைக்கப்பட்டுள்ளன.
எனவே உலக சுகாதார தாபனம் வழங்கும் நிதியில் எமது நாட்டின் சுகாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இதனால் அரசாங்கம் சுகாதார துறைக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.