இலங்கை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடு என்பது உலகத்துக்குக் காண்பிக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) மதுர விதானகே தெரிவித்தார்.
இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வு செய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முதல் தடவையாக அண்மையில் (22) பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) மதுர விதானகே தலைமையில் கூடியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இந்நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை போக்குவதற்கு அந்நிய செலாவணியை பெறுவது அவசியமானது எனவும், அதற்காக இந்நாட்டில் முதலீடுகள் மற்றும் வர்த்தகங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டுமெனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இலங்கை முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு என்பதை உலகத்துக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும், அதற்குத் தேவையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முதலீட்டு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆலோசனைகளை அந்தந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்களிடமிருந்து குழுவுக்குப் பெற்றுக் கொள்வது முக்கியம் என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் இந்தப் பிரேரணைகளை முன்வைப்பதற்குத் தேவையான வழிமுறைகளை ஊடகங்கள் மூலம் அறிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இந்நாட்டில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கு ஒரு நிறுவனத்தை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பல்வேறு இடங்களுக்குச் சென்று பெறவேண்டிய அனுமதி பெறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை ஒரே இடத்தில் இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்பது குழுவின் கருத்தாக இருந்தது. அத்துடன், முதலீட்டாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி செயலகத்தில் தனியான இடமொன்றை ஒதுக்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
முன்னுரிமையின் அடிப்படையில் அவசியமான திட்டங்கள் சிலவற்றை அடையாளம் கண்டு அந்தந்தத் துறையை விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, இந்த விடயத்தில் வெளிநாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை ஆய்வு செய்து குழுவின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேலும் தெரிவித்தார்.