மக்கள் தாம் புரிகின்ற தொழிலுக்கு ஏற்ற சம்பளத்தை எதிர்பார்க்கின்றனர். அது பொதுவான விடயமாகும். இது சகல மக்களுக்கும் பொருத்தமானதாகவே அமைகின்றது. தனியார் ஊழியரோ அல்லது அரசாங்க ஊழியர்களோ உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை எதிர்பார்ப்பார்கள்.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் சம்பளம் எவ்வளவு? அவருக்கு கிடைக்கின்ற வசதிகள் சலுகைகள் என்ன? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களில் பல விவாதங்கள் கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் 25 லட்சம் ரூபாவுக்கும் அதிகமாக மாதாந்த சம்பளம் பெறுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதியத்தை பெறுவதாகவும் பாராளுமன்றத்தில் சில அரசியல்வாதிகளால் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து இந்த சம்பள உயர்வு தொடர்பாக பல கருத்து பரிமாற்றங்கள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கியின் நாணயக் கொள்கையை மதிப்பீடு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர் அங்கு பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
தனது சம்பளம் எவ்வளவு? மற்றும் ஏனைய வசதிகள் சலுகைகள் என்ன? சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஓய்வூதியம் கிடைக்கப்பெறுகின்றதாக கூறப்படுகின்ற விவகாரம் உள்ளிட்ட பல கேள்விகள் இதன்போது எழுப்பப்பட்டன. அவற்றுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்தை காணமுடிந்தது.
இதன்போது ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகையில்
எனக்கு 25 லட்சம் ரூபா சம்பளம் கிடைப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஓய்வூதியம் கிடைப்பதாகவும் சிலர் தெரிவித்திருந்தனர். எனக்கு 25 இலட்சம் ரூபா சம்பளம் கிடைப்பதில்லை. அது ஒரு பொய்யான தகவல். எனக்கு மத்திய வங்கி ஆளுநர் என்ற வகையில் மாதாந்தம் 4 இலட்சம் ரூபா சம்பளம் கிடைக்கின்றது. அதேபோன்று வீடு ஒன்றும் வாகனமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதை தவிர எந்த விதமான ஒரு சலுகையையும் நான் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
அதன்படி மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதாந்தம் 4 இலட்சம் ரூபா சம்பளம் கிடைப்பதாக தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னர் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவே சம்பளமாக கிடைக்கப்பெற்றது. ஆனால் கடந்த காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதியத்தை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தான் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கையின் சார்பாகவே பணியாற்றியதாகவும் அதன்போது கிடைக்கவேண்டிய சம்பளமே கிடைத்ததாகவும் தனக்கு அதற்காக ஓய்வூதியம் கிடைப்பதில்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்திருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியத்தில் நான் சில வருடங்கள் பணியாற்றினேன். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியே நான் அங்கு பணியாற்றினேன். எனவே அங்கு எனக்கு சம்பளம் கிடைத்தது. ஆனால் அதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எனக்கு எந்தவிதமான ஓய்வு ஊதியமும் கிடைப்பதில்லை. நான் எந்தவிதமான ஓய்வூதியத்தையும் சர்வதேச நாணய நிதியத்திடம் பெறவில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என்று நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்த்துள்ளது. அந்தவகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை மத்திய வங்கி நடத்துகின்றது. அதனடிப்படையில் 2.9 பில்லியன் டொலர் உதவி சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு இலங்கை ஏற்கனவே தனக்கு கடன் வழங்கிய தரப்புக்களுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும். அந்த சர்வதேச கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை மத்திய வங்கி முன்னெடுத்துள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு மத்தியிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் பெறுகின்ற சம்பளம் மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான கருத்துகள் பரவலாக விவாத்துக்கு உட்பட்டு வந்த நிலையில் அதற்கு தற்போது அவர் பதிலளித்திருக்கிறார்.