கருந்துளை ஒளி எதிரொலிகளை ஒலி அலையாக மாற்றிய நாசா

129 0

அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது.

சலனமற்று இருக்கும் ஏரி நீரில் சிறு கல்லை போட்டால் சிற்றலைகள் எழுவது போலவும், காதின் அருகே பேப்பரை வேகவேகமாக ஆட்டினால் காற்றில் அதிர்வு ஏற்பட்டு சப்தம் எழுவது போலவும் கால-வெளி (space-time) பரப்பில் நிறை கொண்ட பொருட்கள் நகரும்போது அந்த அதிர்வில் காலவெளி பரப்பு அதிர்ந்து ஈர்ப்பு அலைகளும், ஒளி அலைகளும் எழும் என்பது ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவம்.

இந்த நிலையில், நாசா கருத்துளையை சுற்றியுள்ள ஒளிக்கற்றைகளின் எதிரொலிப்புகளை ஒலி அலைகளாக மாற்றி வெளியிட்டுள்ளது. கருத்துளையின் ஒளி எதிரொலிப்புகளை நம்மால் உணர முடியாது. அதன் காரணமாகவே சோனிபிகேஷன் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது. இதனை நாசா தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், “கருந்துளைகள் அவற்றிலிருந்து ஒளியை (ரேடியோ, புலப்படும் மற்றும் எக்ஸ்-கதிர்கள் போன்றவை) வெளியேற விடாமல் தடுக்கின்றன. இருப்பினும், சுற்றியுள்ள பொருட்கள் மின்காந்த கதிர்வீச்சின் தீவிர வெடிப்புகளை உருவாக்கலாம். அவை, வெளிப்புறமாக பயணிக்கும்போது,விண்வெளியின் வாயு மற்றும் தூசு பரப்புகளிலிருந்து ஒளிக்கற்றைகள் சிதறும். இவை பூமியிலிருந்து 7,800 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.