கரோனா கட்டுப்பாடுகளால் கொந்தளிப்பு: ஜின்பிங்குக்கு எதிரான போராட்டக் களத்தில் மாணவர்கள் தீவிரம்

196 0

தீவிர கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிபருக்கும் எதிரான பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றை முழுமையாக இல்லாமல் செய்யும் நோக்கில் ‘ஜீரோ கரோனா’ எனும் கொள்கையை கம்யூனிஸ்ட் அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியே செல்வதில் கட்டுப்பாடு, பணி இடங்களில் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நீண்ட நெடுங்காலமாக அமல்படுத்தப்பட்டு வரும் இந்தக் கட்டுப்பாடுகளால் சீன மக்கள் கோபம் அடைந்துள்ளனர். அரசு தங்களை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், தங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், அரசு ‘ஜீரோ கரோனா’ எனும் தனது கொள்கையில் உறுதியாக இருப்பதால், தங்கள் போராட்டத்தை தற்போது அரசுக்கு எதிராகவும், அதிபருக்கு எதிராகவும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் விரிவுபடுத்தி உள்ளனர்.

தலைநகர் பீஜிங், ஷாங்காய், உரும்கி என பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதேபோல், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒழிக என்றும், கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக என்றும் போராட்டங்களில் பொதுமக்களும் மாணவர்களும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இத்தனைக்கும் இவ்வாறு கோஷமிடுபவர்களை தேசதுரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் எனும் நிலையில், அவர்கள் துணிந்து இவ்வாறு கோஷமிடுகின்றனர்.

1989-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகவும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானமென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. எனினும், அது ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் மிகப் பெரிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கரோனா தொற்று உலக அளவில் குறைந்து வந்தாலும் சீனாவில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. நாளொன்றுக்கு 40,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.