இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த அனைத்து அரசாங்கங்களும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
இவ்வாறான நிலையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுவதை எவராலும் நம்ப முடியுமா என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று (28) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வை வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கூட்டிணைந்த அடிப்படையில் அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்துள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்ட அரசாங்கம் இருந்திருக்கிறது. இந்த அரசாங்கங்கள் எல்லாம் இனப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.
இவ்வாறான நிலையில் அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும் என எவராலும் நம்ப முடியுமா? உலகில் உள்ள எவரும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை கருத்தில் கொள்வார்களா,சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடுகளே தொடர்ந்த வண்ணம் உள்ளன.
பொருளாதார மீட்சிக்கான நீண்ட கால திட்டமாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. தென்னாபிரிக்காவில் உள்ளது போல உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையா அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழு ஆழமான விசாரணைகளை மேற்கொண்டது. கொலை, கொடூரமான குற்றச்செயல்களை செய்தவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு விசாரணைகளை செய்தது. இதில் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலா உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் கிடைக்கப்பெறும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது, ஆனால் நாணய நிதியம் மக்கள் ஆணை தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் ஆணை எனும்போது தேர்தல் பிரதானமானது. இவ்வாறான நிலையில் தேர்தலை நடத்தாது விட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகள் மற்றும் ஜி.எஸ்.பிளஸ் வரிச்சலுகை உட்பட சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கூட இழக்க நேரிடும்.
மாகாணசபைகளுக்கான தேர்தல் கடந்த மூன்று வருடங்களாக நடத்தப்படவில்லை. எந்தவொரு மாகாணசபைகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இல்லை.
இதே நிலைமை உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்டால் பிரச்சனை ஏற்படும்.ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாது.
இலங்கையின் பொருளாதார பாதிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்’ செலுத்தியுள்ளது. பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் நாட்டில் தற்போது மனித உரிமைகள் சிதைவடைந்துள்ளன.
ஊழல் மோசடி, அரச நிதி வீண் விரயம் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இதுவரை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை, ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இவ்வாறான நிலையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்றார்.