வங்கி ATM அட்டைகள் மூலம் பண மோசடி

156 0

வங்கிகளில் ஏரிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க வந்த நபர்களை ஏமாற்றி அவர்களின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பல இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸார் தொம்பே பிரதேசத்தில் வைத்து  கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் போலியான  வங்கி அட்டைகளைத்  தயாரித்து அவற்றுடன்  வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களுக்கு  அருகில் காணப்படுவதுடன் ஏரிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க எவராது வரும்போது, அந்த இயந்திரத்திலிருந்து பணம் எடுப்பதனை முன்கூட்டியே சில கருவிகளைப் பயன்படுத்தி தடுப்பதாகவும் இதன்போது பணத்தை மீளப்பெற  அங்கு வருவோர்  தமக்கான பணத்தை எடுக்க முடியாத நிலையின்போது சந்தேக நபர்   தானாகவே முன்வந்து பணத்தை பெற உதவுவதுபோல் நடிப்பதும்  தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரிடம் அவர்கள் தமது ஏரிஎம் அட்டையை வழங்குவார்கள்.  அத்துடன் குறித்த ஏரிஎம் அட்டையின் இரகசிய இலக்கத்தையும் பெற்றுக் கொள்ளும் சந்தேக நபர்,  ஏரிஎம் அட்டையின் உரிமையாளர்கள் முன்பாகவே  பணத்தைப் பெற முயற்சிப்பதாகவும்  பின்னர் சந்தேக நபரோ  குறித்த  நபரின் அட்டையை மறைத்து வைத்துவிட்டு தன்னால் பணத்தை மீளப் பெற முடியாதுள்ளதாகக்   கூறி தான்  வைத்திருந்த போலி அட்டையை  அவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்று விடுவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பின்னர் சந்தேக நபர் வேறு ஏரிஎம் இயந்திரங்கள் மூலம் உண்மையான அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை மீளப் பெற்று மோசடியில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.