மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

136 0

வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 35 வயதுடைய யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை திங்கட்கிழமை (நவ.28) இடம்பெற்றதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த காட்டு யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமாகாணத்திற்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பா.கிரிதரன் மேற்கொண்டிருந்தார்.

உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் கொண்டதாகவும், விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ.27) இரவு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.