ஒருசில பெளத்த தேரர்கள் காலையில் காவி உடையை அணிந்துகொண்டு போராட்டங்களில் கலந்துகொள்கின்றனர். பின்னர் இரவு நேரங்களில் போராட்டக்காரர்களுடன் இணைந்து களியாட்டங்களில் ஈடுபடுவதை நாங்கள் முகப்புத்தங்களில் காண்கின்றோம்.
பஞ்ச சீலத்தை பாதுகாத்துக்கொண்டு செயற்படும் எந்த தேரர்களையும் அகெளரவப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என ஆளும் கட்சி பிரதமகொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், சங்கசபை ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அமைக்கப்பட்டது.
அன்று அரசர்களுக்கு ஆலாேசனை வழங்கியது மகாநாயக்க தேரர்களாகும். பிக்குமார்களுடன் விளையாட்டுத்தனமாக செயற்படக்கூடாது என கூற்றொன்று இருக்கின்றது. ஆனால் இன்று ஆட்சியாளர்களின் ஆலாேசனைகளை கேட்கவேண்டிய நிலைக்கே மகாநாயக்க தேரர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அரசர் தெரிவிக்கும் அனைத்தையும் அனுமதிக்க வேண்டாம் என்றே புத்தபெருமான் உபதேசதித்திருக்கின்றார்.
ஆனால் ஆட்சியாளர்கள் தெரிவிப்பதுபோல் மகாநாயக்க தேரர்கள் இருக்கவேண்டும் என சில ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
பிக்குமாரை அவமதிக்கும் வகையில் சொற்களை பிரயோகிப்பது பொருத்தமில்லை. கடந்த சில தினங்களு்ககு முன்னர் இந்த சபையில் தேரர்களை அவமதிக்கும் வகையில் பிரயோகித்த வார்த்தையால் ஒட்டுமொத்த தேரர்களும் விரக்தியடைந்திருக்கின்றார்கள். இவ்வாறு செயற்படவேண்டாம் என்றார்.
இதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்ந்து பதிலளிக்கையில், மகாநாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் யாரும் கதைப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை. கடந்த காலங்களில் காலை நேரங்களில் ஒரு சில தேரர்கள் காவியுடை அணிந்து போராட்டங்களில் ஈடுபட்ட பின்னர் இரவு நேரத்தில் போராட்டக்காரர்களுடன் களியாட்டங்களில் ஈடுபடுபவதை நாங்கள் முகப்புத்தங்களில் காண்கின்றோம். இதனால் தேரர்களுக்கு இருக்கும் கெளரவம் மக்கள் மத்தியில் இல்லாமல் போகின்றது.
மாறாக பஞ்ச சீலத்தை பாதுகாத்துக்கொண்டு செயற்படும் தேரர்களை அகெளரவமாக யாரும் கதைப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை. அத்துடன் 1988 காலப்பகுதியில் ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் தேரர்களை காவியுடையில் சுற்றி கங்கைகளில் போட்ட சந்தர்ப்பங்களில் அதனைத்தடுப்பதற்கு இதுபோன்று உபதேசம் செய்ய அன்று யாரும் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். எந்த மதத்தலைவர்களையும் அகெளரவப்படுத்துவதை நாங்கள் அனுமதிப்பதில்லை என்றார்.